விடுதலை-1ல் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி) கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி) போலீசில் பிடித்துக் கொடுத்தார். 2ம் பாகத்தில், பெருமாள் வாத்தியார் ஏன் வன்முறையைக் கையாண்டார் என்று சொல்கின்றனர். கருப்பனுக்கு (கென் கருணாஸ்) பண்ணையார் போஸ் வெங்கட் மூலம் நேர்ந்த கொடுமையின் காரணமாக, தனது பெயரைக் கருப்பன் என்று மாற்றிக்கொண்ட பெருமாள் வாத்தியார், பண்ணையார்களுக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். அப்போது தோழர் ‘ஆடுகளம்’ கிஷோரிடம் அரசியல் சித்தாந்தம் கற்றுக்கொண்டு, அவரது இயக்கத்தில் களப்பணியாற்றும் விஜய் சேதுபதி, கொள்கை மாறுபாடு காரணமாக அவரை விட்டு விலகுகிறார்.
அப்போது ரைஸ் மில் ஓனர் ஜெய்வந்த், ‘ஆடுகளம்’ கிஷோரைக் கொன்றுவிடுகிறார். இதனால் விஜய் சேதுபதி, மக்கள் படையை பயங்கரவாத இயக்கமாக மாற்றுகிறார். இந்நிலையில், போலீசார் அவரைக் கைது செய்த செய்தி வெளியாகிறது. ஆனால், காட்டில் தப்பித்துச் செல்லும் விஜய் சேதுபதி என்ன ஆனார்? சூரி என்ன செய்கிறார் என்பது மீதி கதை. 2வது பாகத்தின் மையப்புள்ளி என்பதால், கென் கருணாஸ் உயிரோட்டமான நடிப்பை வழங்கியுள்ளார். போஸ் வெங்கட் வில்லத்தனம் செய்துள்ளார். கென் கருணாைஸைக் காப்பாற்ற முடியாத பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி, படம் முழுவதையும் தோள்களில் தூக்கிச் சுமந்துள்ளார்.
அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சாட்டையடி. சர்க்கரை ஆலை முதலாளி வின்சென்ட் அசோகனின் மகள் மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்குமான காதலும், இல்லறமும் கவிதை. ‘ஆடுகளம்’ கிஷோர், ரம்யா ராமகிருஷ்ணன் ஜோடி இயல்பாக வாழ்ந்துள்ளனர். சூரிக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும், கிளைமாக்சில் அவர் செய்யும் செயலால் நச்சென்று அவரது இமேஜ் உயர்கிறது. அவர் தனது அம்மாவுக்கு எழுதும் கடிதத்தின் மூலமாகவே படம் நகர்கிறது. வேட்டி, சட்டை மற்றும் கிராப்பில் மஞ்சு வாரியர் நச்சென்று இருக்கிறார். வசன உச்சரிப்பில் மலையாள வாடை.
ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், இளவரசு, தமிழ், அருள்தாஸ், ஷரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், ஜெய்வந்த், பவானிஸ்ரீ, அனுராக் காஷ்யப் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். மீண்டும் சேத்தன் வில்லத்தன போலீசாக வந்து சாபம் வாங்குகிறார். போலீசும், அரசியல் அதிகார வர்க்கமும் சேர்ந்து நடத்தும் வன்முறைகளை தோலுரித்துக் காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், படம் முழுக்க ‘பாடம்’ நடத்தியதை சற்று குறைத்திருக்கலாம். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்துக்கு மிகப்பெரிய பலம். பனி மறைக்கும் காட்டில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் மனதை உலுக்குகிறது. கலை இயக்குனர் ஜாக்கியின் பணி கவனிக்கத்தக்கது. சாதி, அதிகார வர்க்கம், அரசியல் என்று என்னென்னவோ பேசினாலும், படக்குழுவினரின் கடுமையான உழைப்பு கவனத்தை ஈர்க்கிறது.