லாஸ்ஏஞ்சல்ஸ்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை குழுவில் இடம் பெற்றுள்ள பெண் இசைக்கலைஞரான மோகினி டே என்பவர் தனது கணவரை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் யூடியூபர்கள் இருவரையும் இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வக்கீல் நோட்டீசும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மோகினி டே நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தந்தை மாதிரி. எனது தந்தையை பார்ப்பது போல் அவரை பார்க்கிறேன். அவருடன் சில வருடங்கள் பணியாற்றினேன். இப்போது அமெரிக்காவில் எனக்கான தனி இசைக்குழு உள்ளது. எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளியுங்கள். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இதுபோன்ற உணர்வுப்பூர்மான விஷயங்களில் பொதுமக்கள் எவ்வித மரியாதை, பரிவு மற்றும் அனுதாபம் இல்லாமல் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். சில ஊடகங்கள் இந்த இரு சம்பவங்களையும் கொச்சைப்படுத்தியது குற்றச்செயல் எனக் கருதுகிறேன். சில வதந்திகள் ஒருவரின் மனதில், வாழ்க்கையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பரபரப்புச் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அறிவதில்லை. இவ்வாறு மோகினி டே கூறினார்.