சென்னை: ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கங்குவா’. 3டியில் உருவாகியுள்ள இது, வரும் 14ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 11,500 திரைகளில் வெளியாகிறது. வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது சூர்யா பேசியதாவது: ‘கங்குவா’ படத்தின் ஷூட்டிங் 170 நாட்கள் நடந்தது.
இப்படத்தின் மிக முக்கியமான நபர், ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர். அவர் வடிவமைத்திருக்கும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவர் குதிக்கச் சொன்னால், ஏன் என்று கேள்வி கேட்காமல், 10வது மாடியில் இருந்தும் கீழே குதித்துவிடுவேன். அவர் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. இயற்கை வெளிச்சத்தில் வெளிப்புற பகல் நேரக் காட்சிகளை வெற்றி பழனிச்சாமி சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார். அதைப் பார்த்து வியந்த கரண் ஜோஹர், இது எப்படி சாத்தியமானது என்று கேட்டார். இப்படத்தின் கதையை சிவா உருவாக்கியபோது, இது தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத கதைக்களம் என்று தோன்றியது.
இனி இப்படியொரு படத்தை உருவாக்க முடியுமா என்றும் தோன்றியது. கதைக்களம் 700 ஆண்டுகள் பின்னோக்கி இருந்தாலும், இன்றைய ஆடியன்சுக்கும் எளிதில் புரியும் வகையில் காட்சிகள் இருக்கும். 4 தீவுகளைச் சுற்றி கதை நடக்கும். அதில் கங்குவாவின் கடவுள் தீ. ஒரு தீவில் இருப்பவர்களின் கடவுள் தண்ணீர். இன்னொரு தீவுக்கு ரத்தம் என்றிருக்கும். அவர்களுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடு, பேராசை கொள்ளுதல், நெறிமுறைகள் மாறினால் என்ன நடக்கும் என்பதே கதைக்களம்.