சென்னை: லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம், ‘பென்ஸ்’. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகம் ஆகிறார். இவர், பிரபலமான பாடகர் திப்புவின் மகன். அவர் கூறியதாவது: அப்பா இசைத்துறையில் இருப்பதால், சிறுவயது முதல் எனக்கும் இசையின் மீது தனி ஆர்வம் இருந்தது. முறைப்படி இசையைக் கற்றேன்.
பிறகு இசைதான் உலகம் என்று மாறியது. ஏ.ஆர்.ரஹ்மான் சார், அனிருத் சார் ஆகியோ ரிடம் பணியாற்றினேன். கட்சி சேரா, ஆச கூட என இரண்டு மியூசிக் ஆல்பம் வெளியிட்டேன். இவ்விரண்டுமே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ‘பென்ஸ்’ படத்துக்காக, எனது பணிகளின் மூலம் அறிந்த தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் சார், சுதன் சுந்தரம் சார், ஜெகதீஷ் சார் ஆகியோர் அழைப்பு தந்தனர்.
லோகேஷ் சார் பேசும்போது, ‘உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். நல்லபடியாக இசையைக் கொடுப்பாய் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது’ என்றார். முழுநீள ஆக்ஷன் படம் என்றாலும், இசைக்கு என்று தனி முக்கியத்துவம் இருக்கிறது. அதனால்தான் இப்படத்தில் 7 பாடல்கள் இருக்கிறது. ஏற்கனவே 3 பாடல்களை முடித்து விட்டேன். ஆக்ஷன் படத்தில் இசையின் மூலம் அதிக சத்தம் இருக்கும். அதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.