மும்பை: உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த பாலிவுட் காமெடி நடிகர் ராஜ்பால் யாதவ் (52), ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். டி.வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவில், ‘தீபாவளி நாளன்று இந்துக்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்தாக வேண்டும்’ என்று பேசியிருந்தார். அவரது கருத்து பலத்த சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், உடனடியாக அந்த வீடியோவை நீக்கி விட்டு புது வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘தீபாவளிநாளன்று இந்துக்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்தால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டு இருந்தால், அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார். பிறகு நிருபர்களிடம் பேசிய ராஜ்பால் யாதவ், தன்னிடம் அந்த வீடியோவின் ஒரு பிரதியைக் கேட்ட நிருபர் ஒருவரின் செல்போனை ஆவேசத்துடன் பறித்து வீசினார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக ராஜ்பால் யாதவ்வின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு, நிருபர்களை சமாதானம் செய்தனர்.