‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு 5.88 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் இதுவரை 12 லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 88 ஆயிரம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அரசு துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி வைத்தார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளின் 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 அரசு துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாக தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாக தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசு துறைகள் மூலம் மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் இதுவரை 12 லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 88 ஆயிரம் மனுக்கள், மாதம் ரூ.1000 பெறுவதற்கான ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

The post ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு 5.88 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: