இந்துத்துவா பற்றி அமித்ஷா பாடம் எடுக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே சாடல்

மும்பை: இந்துத்துவா பற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.கார்த்திகை தீப தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி இந்தியா கூட்டணியை சேர்ந்த 120 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ள நோட்டீசை மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கினர்.

இதில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி எம்பிக்களும் அடங்குவர். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக உத்தவ் சிவசேனாவை கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு விட்டதாக சாடினார். இதுபற்றி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். அப்போது, ‘இந்துத்வா பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ விவாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது. நமது சொந்த நாட்டின் தேசிய கீதம் குறித்து எப்படி விவாதம் நடத்த முடியும். ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஏன் ‘வந்தே மாதர’த்தை நினைவு கூருகிறார்கள். பாஜவுக்கு ‘வந்தே மாதரம்’ மீதான காதல் ஒருநாள் மட்டும்தான். மகாராஷ்டிராவில் தினமும் ஏதாவது ஒரு அமைச்சரின் ஊழல் வெளிவருகிறது. ஆளும் கட்சி தலைவர்கள் பணக்கட்டுகளுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகிறது. இருப்பினும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டுகொள்வதில்லை. ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கும் ஒரு “கவச பாதுகாப்பு” இலாகாவை முதல்வர் தொடங்கி அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Stories: