கீழ்பென்னாத்தூர் அருகே துணிகரம் அம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: போலீசார் விசாரணை

 

கீழ்பென்னாத்தூர், ஜூலை 28: கீழ்பென்னாத்தூர் அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராமம், தோப்பு பகுதியில் ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், ஆடி மாதம் என்பதால் நேற்று முன்தினம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், இரவு வழக்கம்போல் தர்மகர்த்தா முத்துகிருஷ்ணன் கோயில் நடையை அடைத்து விட்டு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தர்மகர்த்தா முத்துகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், அவர் கோயிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், காணிக்கை பணத்தை திருடியவர்கள் அருகே அன்னதானத்திற்காக வைத்திருந்த அரிசியை கீழே கொட்டி விட்டு, அந்த பையில் காணிக்கை பணத்தை மூட்டை கட்டி எடுத்துச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தர்மகர்த்தா முத்துகிருஷ்ணன் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருட்டு நடந்த ரேணுகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத இறுதியில் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணுவது வழக்கம்.

தற்போது ஆடி மாத வழிபாடுகள் நடந்து வரும் நிலையில் மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கையாக ரூ.60 ஆயிரம் வரை கிடைக்கும் என கோயில் நிர்வாகம் தரப்பில் போலீசில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கீழ்பென்னாத்தூர் அருகே துணிகரம் அம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: