தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் விவசாயிகள் பயனடைய அதிகாரி வேண்டுகோள் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்

கீழ்பென்னாத்தூர், ஜூலை 25: கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் 2025-26ம் ஆண்டில் 9 கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆண்டுகள் தரிசு நிலமாக 10 ஏக்கர் தொகுப்பாக இருந்தால், அந்த தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை நீக்கம் செய்து, மேடு பள்ளங்களை சமன்படுத்தி, நீர் ஆதாரத்திற்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து தரப்படும்.

மேலும் அந்தத் தொகுப்பு நிலப்பரப்பில் பழமரக் கன்றுகள் நடவு செய்து, அந்த கன்றுகளுக்கு சொட்டுநீர் அமைப்பும் அமைத்துத் தரப்படும். அந்த 10 ஏக்கர் பரப்புக்கு குறைந்தது 8 பயனாளிகள் இருக்க வேண்டும். அவ்வாறு தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து, கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயனடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தொகுப்பு தரிசு நிலமாக இல்லாமல் தனிப்பட்ட விவசாயிடம் 3 முதல் 5 ஆண்டுகள் தரிசு நிலமாக இருந்தால், அதில் உள்ள முட்புதர்களை நீக்கம் செய்து, மேம்படுத்தி, அதனை விளைநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கீழ் 2.50 ஏக்கருக்கு ரூ.9600 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. தரிசு நிலத்துக்கான சிட்டா, சம்பந்தப்பட்ட விவசாயியின் பெயரில் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பேட்டரி மற்றும் விசைத்தெளிப்பான்களும், மண் வளத்தை மேம்படுத்தும் உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடைய வேண்டும் என கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் விவசாயிகள் பயனடைய அதிகாரி வேண்டுகோள் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் appeared first on Dinakaran.

Related Stories: