கோயில் நிலம் குடியிருப்போருக்கு சொந்தம் என்பதா? எடப்பாடிக்கு இந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்: கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு இடம் சொந்தமாக்கப்படும். அதிமுக அரசு அமைந்த பிறகு வீடுகட்டி தரப்படும் என எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ‘கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டி தரப்படும் என பேசி இருந்தார். இந்த பேச்சுக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோயிலுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு கோயில் நிலத்தை சொந்தமாக்கி அதில் வீடும் கட்டித்தரப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது.

இதேபோல் வக்பு நிலங்களிலும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான நிலங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் அந்த கருத்தை திரும்பபெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கோயில் நிலம் குடியிருப்போருக்கு சொந்தம் என்பதா? எடப்பாடிக்கு இந்து முன்னணி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: