துணை ஜனாதிபதியா, பாஜ தலைவர் பதவியா? கட்டார் பதிலுக்காக காத்திருக்கும் மேலிடம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

புதுடெல்லி,: ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சருமான மனோகர் லால் கட்டாரிடம் துணை ஜனாதிபதி அல்லது பாஜ தேசிய தலைவர் பதவி இரண்டில் ஒன்றை வழங்க பா.ஜ மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது. இதுபற்றி டெல்லியில் நடந்த ரியல் எஸ்டேட் உச்சி மாநாட்டில் கட்டாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

நான் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. என்னிடம் எந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் அதற்கேற்ப நான் செயல்படுகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பதவிக்கும் உரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்எஸ்எஸ் ஊழியராக 1980களில் பரிதாபாத்தில் எனக்கு முதல் பணி கிடைத்தது. 1981ல் மாவட்ட பிரச்சாரக் என்னைச் சந்திக்க வந்தார். இரண்டு நாட்கள் கூட்டங்களுக்குப் பிறகு, அவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னார்.

அவர் என்னை உங்களை ரோஹ்தக்கிற்கு மாற்றி விட்டதாக கூறினார். அப்போதும் நான் சரி என்று தான் பதில் அளித்தேன். ஏன் என்று கேட்கவில்லை. நான் ஏன் யோசிக்க வேண்டும். ஏன் ரோஹ்தக் என்று நான் ஏன் கேட்க வேண்டும். எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படும் போதெல்லாம் நான் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

எந்த வேலையும் பெரியதோ சிறியதோ இல்லை. துணை ஜனாதிபதி பதவியாக இருந்தாலும் சரி அல்லது பா.ஜ தேசிய தலைவர் பதவியாக இருந்தாலும் சரி அல்லது இரண்டும் இல்லாமல் இருந்தாலும் சரி எனக்கு உரிய வேலை இருந்து கொண்டே இருக்கும். எனக்கு வேறு ஏதாவது பணிகிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* தன்கர் பதவி விலகலுக்கு விடை கிடைத்தது
மனோகர்லால் கட்டார் கூறுகையில்,’ அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார். ஒன்றிய அரசை நம்பாமல் அவர் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அது அரசு கொண்டு வர வேண்டிய தீர்மானம். ஆனால் எதிர்க்கட்சியினர் தீர்மானத்தை அவர் முதலில் ஏற்றுக்கொண்டார்’ என்று தெரிவித்தார்.

The post துணை ஜனாதிபதியா, பாஜ தலைவர் பதவியா? கட்டார் பதிலுக்காக காத்திருக்கும் மேலிடம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: