நாடாளுமன்ற துளிகள்

* மத்திய செயலக கட்டிட பணிகள்
மக்களவையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டோகன் சாஹூ கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘பொதுவான மத்திய செயலகத்தின் கீழ் 10 கட்டிடங்கள் கட்டப்படும். இவற்றில் முதல் மூன்று கட்டிடங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். மேலும் மூன்று கட்டிடங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் அவை நிறைவடையும். கட்டிட எண் 10ன் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நிறைவடையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* 95.1 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு கழிப்பறை
ஒன்றிய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி. சோமன்னா மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘729 மாவட்டங்களை உள்ளடக்கிய 17,304 கிராமங்களை உள்ளடக்கிய அரசு கணக்கெடுப்பின்படி 95.1 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு கழிப்பறை வசதி உள்ளது. 92.7 சதவீத ஆர்கானிக் கழிவுகளை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 78.7 சதவீதம் கழிவுநீர் அகற்றும் அமைப்புகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

* விமானங்களுக்கு 69 போலி வெடிகுண்டு மிரட்டல்
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘இந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி விமானங்களுக்கு 69போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி வரை விமான நிறுவனங்களுக்கு மொத்தம் 881 போலிவெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

* நவோதயா வித்யாலயாவில் 12000 காலி பணியிடங்கள்
மாநிலங்களவையில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்த பதிலில், ‘‘ஓய்வு பெறுதல், ராஜினாமா, பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் புதிய கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்களில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா சங்கதனில் மொத்தம் 7765 ஆசிரியர் பணியிடங்களும், நவோதயா வித்யாலயா சமிதியில் 4323ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன” என்றார்.

* விமானிகள் விடுப்பு எடுப்பது அதிகரிப்பு
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் ‘‘கடந்த மாதம் 260 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்துக்கு பின், ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானிகள் அதிக அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது. ஜூன் 16ம் தேதி 51 கமாண்டர்கள் மற்றும் 61 முதல் நிலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 112 விமானிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி விடுப்பு எடுத்தனர்” என்றார்.

The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.

Related Stories: