சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக ஏடிஜிபி ஜெயராமனிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை திருவாலங்காடு போலீசார் கடந்த ஜூன் 13ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமன் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏவான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட் வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு பின்னர், விடுதலை செய்யப்பட்டார். இந்த கடத்தல் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா, மணிகண்டன், கணேசன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்த பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமனை ஒருமுறைகூட விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி, வழக்கை சிபிஐக்கு மாற்றப்போவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெயராமன் நேற்று காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் முன்பாக விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி எஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணையில் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏடிஜிபி ஜெயராமன் மறுத்ததாகவும், காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

The post சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக ஏடிஜிபி ஜெயராமனிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: