ஒருபோதும் அடிபணியவோ, சமரசம் செய்யவோ மாட்டேன்; தமிழீழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்: மாநிலங்களவையில் வைகோ கடைசி பேச்சு

சென்னை: மாநிலங்களவையில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:
இந்த பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன். இலங்கை தமிழர்களின் துயரம் மற்றும் சிங்கள அரசால் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் குறித்து 13 முறை கவன ஈர்ப்புத் தீர்மானத்தை இந்த அவையில் கொண்டுவந்து உரையாற்றியிருக்கிறேன்.

இதன் தொடர்ச்சியாக 19 மாதங்கள் ‘பொடா’ சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். ‘மிசா’ சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டேன். மொத்தத்தில், நான் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். பொடா சட்டத்தின் கீழ், எனது உணர்வுகளையும், நிகழ்வுகளையும் ‘சிறையில் விரிந்த மடல்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதினேன். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது. இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் அன்பையும் நட்பையும் இந்த பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் இழக்கிறேன் என்று நினைக்கின்றபோது மனம் வேதனைப்படுகிறது.

நமது மனித வாழ்க்கையில், தோல்வி துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒருபோதும் அடிபணியவோ, சமரசம் செய்யவோ மாட்டேன்; தமிழீழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்: மாநிலங்களவையில் வைகோ கடைசி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: