கிரிவலப்பாதையில் ரூ.64.30 கோடியில் புதிய தங்கும் விடுதி; 2.10 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைகிறது: திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு

திருவண்ணாமலை, ஜூலை 24: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.64.30 கோடியில் 2.10 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தென்னகத்தின் புகழ்மிக்க சைவத் திருத்தலம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான இக்கோயில் நினைக்க முக்தித்தரும் சிறப்புக்குரியது. இங்குள்ள மலையே மகேசன் திருவடிவம். எனவே, மலையை வலம் வருவது(கிரிவலம்) இறைவனை வலம் வந்து வழிபட்டதற்கு நிகராகும். எனவே, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

குறிப்பாக, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சமீப காலமாக பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் திருவண்ணாமலையை மோட்சபுரி என அழைக்கின்றனர்.

இங்கு கிரிவலம் சென்று வழிபடுவது முக்தி பெறும் வழி என்ற நம்பிக்கை மேலோங்கியிருக்கிறது. அதனால், சமீப காலமாக வெளி மாநில பக்தர்கள் திருவண்ணாமலையை தரிசிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். அதற்காக, குடும்பம் குடும்பமாக கிரிவலம் செல்ல வருகின்றனர். அதையொட்டி, திருவண்ணாமலையில் தங்கும் விடுதிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதற்காக, ‘ஹோம் ஸ்டே’ எனும் பெயரில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஈசான்யம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.30 கோடியில் 123 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) ஏற்கனவே அமைக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் நிர்வகிக்கப்படும் இந்த விடுதி போதுமானதாக இல்லை.

எனவே, கிரிவலப்பாதையில் கூடுதலாக ஒரு பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தற்போது கூடுதலாக ஒரு பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க அனுமதித்திருக்கிறது. அதன்படி ரூ.64.30 கோடியில் 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 நபர்கள் தங்கும் வகையில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதில் 2 நபர்கள் தங்கும் வகையில் 128 அறைகளும், 6 நபர்கள் தங்கும் வகையில் 24 அறைகளும், 10 நபர்கள் தங்கும் வகையில் 6 அறைகளும் அமைகிறது. அதுதவிர, குடியிருப்பு வடிவிலான 8 வில்லாக்கள் அமைக்கிறது.

அதோடு, நான்கு தளங்கள் கொண்ட இந்த தங்கும் விடுதி அறைகள் குளிர்சாதன வசதியுடன் கூடியவை. அதோடு லிப்ட், பார்க்கிங், உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி அமைகிறது. இப்பணியை, ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதி ஏற்படும். மேலும் தனியார் தங்கும் விடுதிகளை விட கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

The post கிரிவலப்பாதையில் ரூ.64.30 கோடியில் புதிய தங்கும் விடுதி; 2.10 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைகிறது: திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: