×

ஊட்டி அருகே முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பி: சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம்

ஊட்டி: ஊட்டி அருகே முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பி, புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயனிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், வனவிலங்குகளை காணவும் இயற்கை சார்ந்த சுற்றுலாவை நாடி செல்கின்றனர். குறிப்பாக, ஊட்டி அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை வழியாகவும், கூடலூர் வழியாகவும் செல்கின்றனர். அதேபோல், மசனகுடி பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

தொடர் பருவ மழையால் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. இதனால் ஏராளமான வனவிலங்குகள் சாலை ஓரங்களில் வலம் வருகின்றன. குறிப்பாக யானைகள், காட்டு மாடுகள், மான்கள், மயில்கள் அடிக்கடி சாலைகளில் தென்படுகின்றன. சில சமயங்களில் சிறுத்தை, கரடி மற்றும் புலிகள் கூட சுற்றுலா பயணிகள் கண்களில் தென்படுகின்றன. இதுபோன்ற வனவிலங்குகள் வலம் வரும் போது, அதனை புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் யானைகள் சுற்றுலா பயணிகளை விரட்டுவது வாடிக்கையாக உள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகளை வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் உள்ளது. இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை புகைப்படம், செல்பி எடுப்பது தொடர்கிறது. இதனை தடுக்க முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஊட்டி அருகே முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்பி: சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Mudumalai road ,Ooty ,Nilgiris district ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்