×

உறுப்பு மாற்று சிகிச்சை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்; “தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத்தை, நியமித்து 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், மரு.இரா. ம. மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம். சென்னை, மரு.A.ராஜ்மோகன், இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல், மரு.கே. மாரிமுத்து, இணை இயக்குநர் நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு பெரம்பலூர், திருச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை மரு.எஸ்.வினீத் அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பெரம்பலூர் மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2)ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உறுப்பு மாற்று சிகிச்சை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Department of Medical and Public Health ,Pallipalayam, Namakkal district ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்