செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் முதலில் நடந்த 5 போட்டி கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில், தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 45 (45 பந்து, 5 பவுண்டரி), பிரதிகா ராவல் 26 ரன் அடித்தனர். பின்னர் வந்த ஹர்லீன் தியோல் 45 ரன்னில் அவுட்டாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 84 பந்தில் 14 பவுண்டரியுடன் 102 ரன் விளாசினார். ஒருநாள் போட்டியில் அவருக்கு இது 7வது சதமாகும். ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது பங்கிற்கு 45 பந்தில் 50 ரன் அடித்தார். கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் 18 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன் விளாசினார். 50 ஓவரில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன் குவித்தது.
பின்னர் 319 ரன் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில், ஆமி ஜோன்ஸ் 4, டாமி பியூமண்ட் 2 ரன்னில் கிராந்தி கவுட் பந்தில் அவுட் ஆகினர். 3வது விக்கெட்டிற்கு கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் எம்மா லாம்ப் 162 ரன் குவித்தனர். நாட் ஸ்கைவர்-பிரண்ட் 98 ரன்னில் அவுட் ஆகி சதத்தை பறிகொடுத்தார். எம்மா 68 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த சோபியா டங்க்லி 34, ஆலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ் 44ரன் அடித்தனர். 49.5 ஓவரில் 305 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்திய பவுலிங்கில் கிராந்தி கவுட் 6, ஸ்ரீசரணி 3 விக்கெட் எடுத்தனர். ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருது (மொத்தம் 126ரன்) பெற்றார். இங்கிலாந்து மண்ணில் இந்தியா மகளிர் அணி தொடர்ச்சியாக 2வது ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
4ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய கவுர்;
ஒருநாள் போட்டியில் நேற்று 7வது சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் கவுர், ஒருநாள்போட்டியில் 4ஆயிரம் ரன் இலக்கை (4069) எட்டினார். மித்தாலி ராஜ் (7805), ஸ்மிருதி மந்தனா (4588) ஆகியோருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன் எடுத்த 3வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை கவுர் பெற்றார். இதேபோல் இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட்டும் நேற்று 6 ரன் எடுத்தபோது 4ஆயிரம் ரன்னை(4092) தாண்டினார்.
The post இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள்போட்டி; 13 ரன் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி: 2-1 என தொடரையும் கைப்பற்றி அசத்தல் appeared first on Dinakaran.
