போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் பிரச்சினை இல்லை : ஏர் இந்தியா நிறுவனம்

டெல்லி : போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்தவொரு பிரச்சனைகளும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.இதில், 241 விமான பயணிகள் உட்பட 260 பேர் பலியாகினர்.இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) கடந்த 12ம் தேதி முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில், எரிபொருள் சுவிட்ச் கட்-ஆப் நிலையில் இருந்தது என்றும் இது விமானிகளின் குரல் பதிவுகள் மூலம் அறிவதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு வசதிகள் கொண்ட எரிபொருள் சுவிட்ச் எப்படி கட்-ஆப் நிலைக்கு சென்றது என்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787,737 ரக விமானங்களின் எஞ்சின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக்க ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்த ஆய்வு பணிகளை முடித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் 787, போயிங் 737 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனையில் எந்த பிரச்சனையும் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

The post போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் பிரச்சினை இல்லை : ஏர் இந்தியா நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: