செங்கம் நகரில் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி சிவன் கோயிலின் பதினாறு கால் கல் மண்டபம் புனரமைப்பு: அறங்காவலர் குழுவினர் அதிரடி நடவடிக்கை

செங்கம், ஜூலை 22: செங்கம் நகரில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோயில் மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் கட்டிய காலம் முதல் இதுநாள் வரையில் திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. செங்கம் நகர ஆன்மீக பொதுமக்கள், விழா குழுவினர், உபயதாரர்கள் எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோயில் திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரியின் தொடர் முயற்சியின் காரணமாக தமிழக அரசு ரூ.1.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருப்பணி செய்ய தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக பணிகளை துவக்கி வைத்தார். இந்நிலையில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் சிவன் கோயில் வளாகம் முன்பு 16 கால் மண்டபம் முற்றிலும் தனி நபர் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்தது.

மேலும் புனரமைப்பு பணி மற்றும் பழுது பார்த்தல் போன்ற பணிகள் நடைபெறாமல் சிதிலமடைந்திருந்தது. இந்நிலையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கையின் காரணமாக 16 கால் கல் மண்டபத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.

சுவாமி திருவிதி உலா வரும் ரிஷப வாகனம், மயில் வாகனம் போன்ற வாகனங்கள் கல் மண்டபத்தின் உள்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சுவாமியின் வீதி உலா வாகனங்கள் புனரமைப்பு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து கல் மண்டபம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், அறங்காவலர்கள் தர், செந்தில் குமார், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேன்மொழி, ஆய்வாளர் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர். சிவன் கோயில் முகப்பில் இருந்த 16 கால் மண்டபத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றி புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post செங்கம் நகரில் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி சிவன் கோயிலின் பதினாறு கால் கல் மண்டபம் புனரமைப்பு: அறங்காவலர் குழுவினர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: