- 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
- ஆடிப்பூரம் உற்சவத்தையொட்டி அம்மன் வீதியுலா
திருவண்ணாமலை, ஜூலை 21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வெளி பிரகாரம் வரை ஒரு கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். கடந்த 2 ஆண்டுகளாக அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
பவுர்ணமி கிரிவலம்போல, நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வார இறுதி விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உட்பட வெளிமாநில பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பக்தர்கள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும்போதே, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. அதனால், வட ஒத்தைவாடை தெரு தொடங்கி பூத நாராயணன் கோயில், தேரடி வீதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தரிசன வரிசை நீண்டிருந்தது. அதனால், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்த பிறகு தரிசனம் செய்ய முடிந்தது. எனவே, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் தவிப்படைந்தனர். மேலும், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, பெரியார் சிலை சந்திப்பு தொடங்கி பஸ் நிலையம் அறிவொளி பூங்கா வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. மாட வீதியில் போக்குவரத்து அனுமதியில்லை என அறிவிக்கப்பட்ட நிலையிலும், அனுமதியின்றி ஏராளமான வாகனங்கள் நுழைந்ததால் அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆடிப்பூரம் உற்சவத்தை முன்னிட்டு 2ம் நாளாக நேற்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
The post அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
