×

தேசிய அளவில் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளை கொண்டது தமிழ்நாடு

தூத்துக்குடி, ஜூலை 21: இந்தியாவிலேயே மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தூத்துக்குடியில் கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அழகர் பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த கலெக்டர் இளம்பகவத் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பேசியதாவது:

பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பமான பாடம் அறிவியல்தான். அறிவியலின் விளைவுகளை உடனடியாக உணர்வதோடு உடனடியாக அதன் பலனை பயன்படுத்துகிறோம். மற்ற பாடங்களில் அதன் பலனை உடனடியாக உணர முடியாது. குறிப்பாக எலக்ட்ரானிக் குறித்து கற்கும் போது அதன் விளைவை உடனடியாக உணர முடியும். அகில இந்திய அளவில் மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக நமது தமிழ்நாடு திகழ்கிறது. பல ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக இது சாத்தியமானது.

இதேபோல் உலகத்திலேயே மிக அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட ஒரு மாநிலமாகவும் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான நிறுவனங்களில் முக்கிய பதவிகளில், மிக உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள், அறிவியல் வல்லுநர்கள் பதவி வகிக்கின்றனர். கணினி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் சார்ந்த நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், நமது பெற்றோர்கள் அறிவியலை ஏற்றுக் கொண்ட விதம், இதன் காரணமாக தான் அறிவியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் கற்றுக்கொண்டதால் சிறந்த உயர்பதவிகளுக்கு சென்றுள்ளனர்.

குறிப்பாக உலக அளவில், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் துறை, பொறியியல் துறை, உயிர் தொழில்நுட்பவியல் துறை மிக அதிகமான மாணவர்கள் சேர்ந்து கற்றுக்கொண்டு உயர்கல்வி பெற்று, அந்த நாடுகளில் உள்ள உயர்ந்த கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உயர்ந்த பதவிகளில் வகிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அழகர் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஜெயராமன், பல்வேறு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர்

கலந்து கொண்டனர்.

The post தேசிய அளவில் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளை கொண்டது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Thoothukudi ,Collector ,Ilam Bhagwat ,Tamil Nadu ,India ,Azhagar Public School ,Thoothukudi Corporation ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...