×

செவ்வந்தி பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு; வரத்து குறைவால் கிலோ ரூ.250க்கு விற்பனை

தஞ்சாவூர், ஜூலை 21: தஞ்சாவூரில் வரத்து குறைந்து செவ்வந்தி பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சையில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பூ சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளும் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பூக்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

தஞ்சாவூர் பூ சந்தையில் இருந்து திருவையாறு, வேதாரண்யம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து வியாபாரிகள் மொத்தம் மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓசூர் பகுதியில் இருந்து செவ்வந்தி பூக்கள் தஞ்சாவூர் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் சாதாரணமாக கிலோ செவ்வந்தி பூக்கள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது செவ்வந்தி பூக்கள் வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் 1 கிலோ செவ்வந்தி பூக்கள் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்; ஓசூர் பகுதியில் செவ்வந்தி பூக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால் அதன் வரத்து குறைந்துள்ளது.

இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரத்து அதிகரித்தால் பூக்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. கோயில்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு மாலை உள்ளிட்டவை தயாரிக்க செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. செவ்வந்தி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மாலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் சாமி அலங்காரம் செய்வதற்கும், தங்களது இல்ல விசேஷங்களுக்கும் பூக்கள் மற்றும் மாலை வாங்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post செவ்வந்தி பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு; வரத்து குறைவால் கிலோ ரூ.250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tholkappiyar Square ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...