தஞ்சாவூர், ஜுலை 20: தஞ்சை கலைஞர் நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக்கொள்கை 2020 என்னும் மதயானை நூல் திறனாய்வுக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வரவேற்றார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழநிமாணிக்கம், எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் பல்கலைக்கழகம், முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், திராவிடர் கழகம் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி,ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் நூல் ஆய்வுரை ஆற்றினர்.
நூலாசிரியர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்புரையாற்றி பேசுகையில்;
நாங்கள் ஒட்டுமொத்தமாக யானையே(கல்விக்கொள்கை) வேண்டாம் என கூறவில்லை. யானை என்பது அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற யானையாக இருந்து விட்டால், நாங்களும் அதன் மீது ஏறி சவாரி செய்ய காத்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு சித்தாந்தம் கல்வி என்கின்ற கட்டமைப்பை இடிக்க கூறுகிறது. நமது திராவிட கொள்கை படி என்கிறது.
ஒட்டுமொத்த இந்தியாவில் எந்த மாநிலமும் மத்திய அரசின் வஞ்சக வார்த்தைக்கு அடி பணியலாம். ஆனால் இது தமிழ்நாடு அடிபணியாது. பாரதிய ஜனதா ஏற்கனவே ஒரு முறை வேலை கையில் எடுத்தார்கள். அப்போதும் நாம் தான் வெற்றி பெற்றோம். இப்போது முருகரை கையில் எடுத்துள்ளனர். கண்டிப்பாக 2026ல் தி.மு.க வெற்றி பெற போகிறது. பா.ஜவுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். எங்களுடைய முருகரை பொறுத்தவரை கோவன கோலத்தில் இருந்தாலும் இருப்பாரே தவிர, உங்களுடைய ஆர்.எஸ்.எஸ் அரை டவுசருக்கு தன்னை பொருத்தி கொள்ளமாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் உண்டு. அந்த நம்பிக்கையின் உள்ளே நாங்கள் செல்லமாட்டோம். தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில், 3 ஆயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய ஒரே இயக்கம் தி.மு.க., தான். எல்லா தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்ற இயக்கமாக தி.மு.க., இருப்பது பாரதிய ஜனதாவிற்கு கண்ணை உறுத்துகிறது. இதை முறியடிக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் அடிப்படை கல்வி தான். நாம் சிந்திக்கவே கூடாது என நினைக்கிறார்கள். தேசிய கல்விக்கொள்கை என்னும் மத யானை நமது தமிழகத்தை சீரழித்து விடும். நாம் சுதாரித்து கொள்ள வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டே மறைந்த முதல்வர் கருணாநிதி கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.
The post தஞ்சாவூர் தேசிய கல்விக்கொள்கை எனும் மத யானை தமிழகத்தை சீரழித்து விடும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.
