தேனி: உத்தமபாளையம் அருகே, சொத்துப்பிரச்னையில் உறவினரைக் கொன்ற சகோதரர்களில் அண்ணனுக்கு ஆயுள், தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தமபாளையம் அருகே, சின்னஓவுலாபுரத்தில் உள்ள வரதராஜபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (46). இவரது மகள் சினேகாவை, அதே கிராமத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நல்லசாமியின் சித்தப்பா சின்னஓவுலாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த கவிசீலன். இவரது மகன்கள் நிஷாந்த்குமார் (25), நிதீஷ்குமார் (23).
இவர்கள் இருவரும் தங்கள் வீட்டுப் பிரச்னைக்காக நல்லசாமியை வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நல்லசாமி இறந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நிஷாந்த்குமார் மற்றும் நிதீஷ்குமார் ஆகியோரிடம், நல்லசாமிக்கு சேரவேண்டிய பூர்வீக சொத்துகள் குறித்து சந்திரவேல்முருகன் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டி போலீசார் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்தனர்.
சந்திரவேல்முருகன் வெட்டிக் கொலை:
இந்நிலையில், கடந்தாண்டு மே 2ம் தேதி சின்னஓவுலாபுரம்-வரதராஜபுரம் சாலையில் டூவீலருடன் நின்றிருந்த சந்திரவேல்முருகனை, நிஷாந்த்குமார், நிதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து வெட்டி பிரேதத்தை ஆட்டோவில் ஏற்றிச்சென்று, எரக்கநாயக்கனூரில் உள்ள ஒரு கிணற்றில் வீசிவிட்டு, சந்திரவேல்முருகனின் டூவீலரை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட நிஷாந்த்குமாருக்கு ஒரு பிரிவில் ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் மெய்க்காவல் சிறைத்தண்டனை, மற்றொரு பிரிவில் 3 ஆண்டு காலம் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் மெய்க்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதேபோல, நிதீஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், செலுத்தத் தவறினால், கூடுதலாக 3 மாதம் மெய்க்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
The post சொத்துப் பிரச்னையில் உறவினரை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தம்பிக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
