திருப்பூர், ஜூலை 20: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 5 சதவீதம் ஊதியம் உயர்த்தி செயல்முறை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோதும் உள்ளடங்கிய கல்வி பணியாளர்களுக்கு மட்டும் விடுபட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக ஊதிய உயர்வு இல்லாமல் பணி செய்து வரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கும், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையப் பராமரிப்பாளர், உதவியாளர்களுக்கும் ஊதியம் உயர்த்தி ஆணை வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் இருவரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணியாணை வழங்கிட ஆணையிட்டும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் வழங்கிட மறுத்து வருகிறது. பணி ஆணை வழங்கிட வேண்டும்.
நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்திட சென்னை , தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு உத்தரவிட்ட பின்னரும் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கிட தாமதிக்கப்பட்டு வருகிறது எனவே பணியில் இணைந்த நாள் முதல் தொழிலாளர் வைப்பு நிதி இபிஎப் வழங்கி வேண்டும். மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊர்திப்படி 8 மாவட்டங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கிட வேண்டும். உச்சநீதிமன்ற ஆணை ரஜ்னிஷ்குமார் பாண்டே தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர். அது போன்று தமிழ்நாட்டிலும் சிறப்பு பயிற்றுநர்களை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணி செய்து வரும் எங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கி உதவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.
