அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

திருப்பூர், டிச.12: திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் மனிஷ் தொடங்கி வைத்தார். வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் மனிஷ் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவனத்திலிருந்து 9 பொறியாளர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள்.

இதில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3528 கட்டுப்பாட்டு இயந்திம், 3810 வாக்காளர் சரிபார்க்கும் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2536 வாக்கு சாவடி மையங்களுக்கு தேவைப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 5565 பேலட் யூனிட், 3997 கட்டுப்பாட்டு இயந்திரம், 4295 வி.வி.பேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புஷ்பாதேவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் அறைக்கு செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதனால் செல்போன்களை அறைக்கு வெளியே அதிகாரிகள் வைத்தனா்.

Related Stories: