திருப்பூர், ஜூலை 20: ஊத்துக்குளி சென்னிமலை சாலையை இணைக்கக்கூடிய ரயில்வே நுழைவுப் பாலம் பழுது காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாலம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்று பாலம் அமைக்கும் பட்சத்தில் கனரக வாகனங்களும் செல்லும் வகையில் உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி வட்ட குழு சார்பில் திருப்பூர் எம்பி சுப்பராயனிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவில், ஊத்துக்குளி சென்னிமலை சாலை பிரதான போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது.
இங்கு ஊத்துக்குளி சென்னிமலை சாலையை இணைக்கக்கூடிய வகையில் ஊத்துக்குளி ரயில்வே நுழைவு பாலம் அமைந்து வருகிறது. இந்த பாலத்தில் கடந்த சில தினங்களாக காரைகளும், செங்கற்களும் பெயர்ந்து விழுந்ததன் காரணமாக ஈரோடு ரயில்வே உதவி மண்டல பொறியாளர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். ஆய்வில், பாலத்தின் தாங்கும் தன்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் அதிர்வுள்ள காரணத்தினால் பாலத்தின் உட்பகுதியில் வாகன போக்குவரத்தை அனுமதிக்க இயலாது என வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் நேற்றைய தினம் முதல் இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. கார் , ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பழுதடைந்த பழைய பாலத்திற்கு மாற்றாக பாக்ஸ் வடிவிலான 3 மீட்டர் உயரத்திற்கான ரெடிமேடு பாலம் கொண்டு வந்து பொருத்துவதற்கான நடவடிக்கையில் ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் முடிவடைய 2 மாத காலம் ஆகும். இந்நிலையில் சென்னிமலை மற்றும் ஊத்துக்குளி வட்டார பொது மக்களின் நன்மை மற்றும் எதிர்காலத்தினை கருதி பழைய பாலத்திற்கு பதிலாக புதுயதாக உருவாக்கி பொருத்துகின்ற பாலத்தின் உயரத்தை 3 என்பதை 3.60 மீட்டராக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் பொது மக்களின் பொது போக்குவரத்திற்கு உதவிகரமாக இருக்கும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post ஊத்துக்குளி-சென்னிமலை ரயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து தடை appeared first on Dinakaran.
