விழுப்புரம், ஜூலை 20: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சு.கொல்லூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி(57). இவர் கடந்த 2021ம் ஆண்டு 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் 2022 ஏப்ரல் 12ம் தேதி சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் சிறுமியை முதியவர் கலியமூர்த்தி பலாத்காரம் செய்தது தெரிய வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட கலியமூர்த்திக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலியமூர்த்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post கண்டாச்சிபுரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
