நண்பனை வெட்டி கொல்ல முயன்றபோது துண்டான காது ரியல் எஸ்டேட் அதிபர்கள் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அருகே முன்விரோத தகராறு

வந்தவாசி, ஜூலை 20: வந்தவாசி அருகே ஏற்பட்ட முன்விரோத தகராறில் நண்பனை கொல்ல முயன்றபோது அவரது காதை வெட்டி துண்டாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் நகரை சேர்ந்தவர் ஷேக் அகமது மகன் ஷேக் ரகுமான்(26) சிக்கன் கடை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பஜார் வீதியில் உள்ள பேக்கரியில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். இவரது நண்பர்களான எம்ஜிஆர் சிலை அருகே உள்ள மீன் கடை உரிமையாளர் சங்கர் மகன் துரைமுருகன்(24), மேட்டு தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் முரளி கிருஷ்ணன் மகன் ராம்குமார்(22), சக்திவேல் மகன் சந்தோஷ்(28) ஆகியோர் ஒன்று சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக உள்ள முன் விரோதம் காரணமாக ஷேக்ரகுமானை பொது இடத்தில் வழிமடக்கி சரமாரியாக தாக்கி துரைமுருகன் மறைத்து வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியால் ஷேக் ரகுமானை கழுத்தில் வெட்டி கொலை செய்ய முயன்றார்.

அப்போது தப்பிப்பதற்காக தலையை வேறு பக்கமாக திரும்பியதால் இடதுபுற காது துண்டானதும், வெட்டி கொலை செய்ய முயன்றவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பஜார் வீதியில் இருந்த மக்களும் இதைபார்த்து அலறிக்கொண்டு ஓடினர். ரத்த வெள்ளத்தில் இருந்த ஷேக் ரகுமானை அங்கிருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து ஷேக் ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து ஷேக் ரகுமானை வெட்டி கொல்ல முயன்ற துரைமுருகன், ராம்குமார் சந்தோஷ் ஆகிய மூவரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post நண்பனை வெட்டி கொல்ல முயன்றபோது துண்டான காது ரியல் எஸ்டேட் அதிபர்கள் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அருகே முன்விரோத தகராறு appeared first on Dinakaran.

Related Stories: