×

சிறுமி பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் சென்னை நீதிபதி ஆய்வு: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அறிவுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 20: திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவன் கடத்தல், சிறுமி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மாவட்ட கலெக்டர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட காவல்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை என பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தல், சிறுமி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதில், காவல்துறை பின்னடைந்து வரும் நிலையில் காவல்துறை மற்றும் நீதித்துறையை உள்ளடக்கிய அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும்போது, என்னென்ன காரணங்களை ஆலோசனையில் எடுத்துக்கொள்ள வேண்டும், காவல்துறை வழக்குகள் பதிவு செய்யும்போது, என்னென்ன அடிப்படை வரையறைகளை சட்டப்படி செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்தும், வழக்குகள் சம்பந்தமான குற்றவாளிகளை கைது செய்யவும், குற்ற சம்பவங்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகனுக்கு, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா வரவேற்பு அளித்தார்.

The post சிறுமி பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் சென்னை நீதிபதி ஆய்வு: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallur court ,Tiruvallur ,Madras High Court ,Judge ,Velmurugan ,Tiruvallur Integrated Court ,Tiruvallur Integrated District Court… ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு