மேலும் இந்தக் கூட்டத் தொடரில் 8 முக்கிய மசோதாக்களை (வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் துறை) அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் இவற்றை எதிர்ப்பதோடு, மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக ‘இந்தியா’ கூட்டணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக ‘சக்ரவியூகம்’ அமைக்க வியூகம் வகுத்துள்ளன. இதுதொடர்பாக விவாதிக்க இன்று மாலை ‘இந்தியா’ கூட்டணி கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரின் போது மோடி அரசை கேள்விக்குள்ளாக்கும் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படும். ‘ஆபரேஷன் சிந்தூர்’ முதல் ஏர் இந்தியா விமான விபத்து வரை சுமார் 7 முக்கிய கேள்விகளை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசிடம் எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* பீகாரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்து. பீகாரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பைத் தொடர உத்தரவிட்டது. ஆனாலும், இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
* பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. ‘பீகாரில் நடப்பது நல்லாட்சியா அல்லது குற்றங்களின் ஆட்சியா?’ என்று காங்கிரஸ் கட்சி பலமுறை நிதிஷ் குமார் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பீகாரில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு வலுவான வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே, ‘இந்தியா’ கூட்டணியின் பட்டியலில் பீகாரின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை முக்கிய இடம்பிடிக்கும்.
* மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘கைப்பாவை’ என்று விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்தல் முடிவுகள் திருடப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், பீகாரிலும் அதேபோன்ற முயற்சிகளை பாஜக கூட்டணி செய்வதாகக் கூறியுள்ளார். இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ‘தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஏஜென்டாக செயல்படுகிறது’ என்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த விமர்சனங்களை நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
* ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து ஒன்றிய அரசை கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே பேசியுள்ள காங்கிரஸ், ‘பஹல்காமில் 26 பேரின் வாழ்வை சூறையாடிய தீவிரவாதிகள் எங்கே? அவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் நமது வீரர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தயாரானபோது, வர்த்தக ஒப்பந்தத்திற்காகப் போர்நிறுத்தம் செய்ய வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தி அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோருவோம்’ என்று கூறியுள்ளது.
* மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது ஏற்பட்ட போர் விமானங்களின் சேதம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து மவுனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, போர் விமானங்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
* குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்ப உள்ளன. விமான விபத்து விசாரணை அமைப்பின் அறிக்கையிலேயே கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அந்த அறிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பப்படும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
* தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்த உள்ளன. மோடி அரசு பலமுறை இதுகுறித்து வாக்குறுதி அளித்தும், அதை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே, இதுகுறித்தும் கூட்டத்தொடரில் விவாதம் எழுப்பப்படும்.
* ஒடிசாவில் பாலியல் புகார் கூறிய கல்லூரி மாணவிக்கு நீதி கிடக்காததால், அவர் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவி பலாத்காரம் உள்ளிட்ட பிரச்னைகளும் எதிர்கட்சிகளால் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளாக முன்னிலைப்படுத்த உள்ளன.
* மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்கும் வன்முறைகள் மற்றும் அமைதியின்மை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்ட உள்ளன. 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன. மேலும், சமூக நீதி தொடர்பான பிரச்னைகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, சமூக பாகுபாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஒன்றிய அரசு முன்மொழிய உள்ள வரி விதிப்பு, கல்வி, சுரங்கம் தொடர்பான 8 மசோதாக்கள் தனியார் மயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் நலன்களை முன்னிலைப்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்ப திட்டமிட்டுள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது; ஒன்றிய பாஜக அரசை சுற்றிவளைக்க எதிர்கட்சிகள் ‘சக்ரவியூகம்’: இன்று மாலை ஆலோசனை; முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டம் appeared first on Dinakaran.
