சாமியார்மடம், ஜூலை 19: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 335 சாலை விபத்து மரணங்கள் நடக்கிறது என்று எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார். சாமியார்மடம் அருகே ரத்னா நினைவு மருத்துவமனை சார்பில் நேற்று போக்குவரத்து காவலர்களின் வசதிக்காக 6 நிழல் குடைகள் வழங்கப்பட்டன. ரத்னா நினைவு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், ரத்னா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன், இயக்குனர் டாக்டர் சாந்திமகிழன் ஆகியோர் நிழல் குடைகளை பயன்பாட்டிற்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின், போக்குவரத்து காவலர்களுக்கான இந்த நிழல் குடைகள் காவலர்களுக்கு போக்குவரத்தை சரி செய்வதற்கு வசதியாக இருப்பதோடு மக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு உதவியாக இருந்த உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அன்பளிப்பாக நிழல் குடைகள் வழங்கிய ரத்னா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியாவில் வருடத்திற்கு 17,000 சாலை விபத்து மரணங்கள் நடைபெறுகிறது. தமிழகம் சாலை விபத்துக்கள் நடைபெறுவதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 335 சாலை விபத்து மரணங்கள் நடக்கிறது. சாலை விபத்து மரணங்களில் பெரும்பாலான மரணங்கள் இருசக்கர வாகனங்களால் ஏற்படுகிறது.
அதற்கு தலைக்கவசம் அணியாதது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, போதையில் வாகனங்கள் ஓட்டுவது ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. சாலை நமக்கானது மட்டுமல்ல பொதுமக்கள் அனைவருக்கும் ஆனது என்ற உணர்வோடு நாம் பயணிக்க வேண்டும். போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து சாலை விபத்துக்களை தடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்களின் ஒத்துழைப்போடு விரைவில் விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 335 சாலை விபத்து மரணங்கள் நடக்கிறது: எஸ்.பி. ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.
