×

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி என்எல்சி நிறுவன முதலீட்டிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

 

நெய்வேலி, ஜூலை 19: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு, பிரதமர் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒரு முக்கிய ஒப்புதலை அளித்துள்ளது. தற்போதுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீட்டு வழிகாட்டுதல்களில் இருந்து விலக்கு அளித்து, என்எல்சி அதன் முழு உரிமையுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூபிள்ஸ் லிமிடெட்டில் ரூ.7,000 கோடி முதலீடு செய்யவும், திட்டங்களில் சுதந்திரமாகவோ அல்லது கூட்டு முயற்சிகள் மூலமாகவோ முதலீடு செய்யவும் CCEA அதிகாரம் அளித்துள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க முடிவு, துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30% நிகர மதிப்பு உச்சவரம்பிலிருந்து என்எல்சி மற்றும் NIRLக்கு விலக்கு அளிக்கிறது. இது செயல்பாட்டு சுயாட்சியையும் நிதி நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும். தற்போது என்எல்சி, 1.4 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொகுப்பை கொண்டுள்ளது.

இந்த சொத்துக்கள் ஒரு ஒருங்கிணைந்த தளத்தின் கீழ் பசுமை ஆற்றல் முயற்சிகளை ஒருங்கிணைக்க NIRLக்கு மாற்றப்படும்.இந்திய அரசின் ஆதரவுடன், என்எல்சி தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை தற்போதுள்ள 1.4 GW இலிருந்து 2030-க்குள் 10 GW ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. COP26 இல் பஞ்சாமிர்தம் மூலோபாயத்தின் கீழ் அறிவிக்கப்பட்டபடி, 2030க்குள் 500 GW புதைபடிவமற்ற எரிபொருள் திறனை நிறுவும் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இது கணிசமாக பங்களிக்கும்.

என்எல்சி நீண்டகால தொலைநோக்கு பார்வை, 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் நாட்டின் இலக்குடன் இணைந்து, 2047க்குள் இந்த திறனை 32 GW ஆக விரிவுபடுத்துவதாகும்.இது குறித்து என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி கூறுகையில் இந்த விலக்கு மூலம் இந்திய அரசு வழங்கிய தொலைநோக்கு ஆதரவு, என்எல்சி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.

இது ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பசுமை ஆற்றல் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்குமான எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த அதிகாரமளிப்புடன், அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும், 2030-க்குள் 10 GW புதுப்பிக்கத்தக்க திறனை அடைவதற்கும், 2047க்குள் 32 GW திறனை அடைவதற்கும் உதவும் மூலோபாய ஒத்துழைப்புகளை உருவாக்கவும் நாங்கள் சரியான நிலையில் உள்ளோம், என்றார்.

The post புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி என்எல்சி நிறுவன முதலீட்டிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union government ,NLC ,Neyveli ,Cabinet Committee on Economic Affairs ,NLC India ,Neyveli, Cuddalore district ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்