நெய்வேலி, ஜூலை 19: நெய்வேலி அருகே காதல் விவகாரத்தில் அக்கா, தங்கையை கத்தியால் குத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (23) என்ற வாலிபருடன் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.
இதனால் மாணவியை தனுஷ் கோவையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனிமையில் இருந்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதனை காட்டி மாணவியை பலமுறை தனிமையில் இருக்க வற்புறுத்தி உள்ளார். இதை அறிந்த மாணவியின் தந்தை சொந்த ஊரான ரோமாபுரிக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் மாணவி தனுஷிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து தனுஷ் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை குத்தி உள்ளார். தடுக்க வந்த மாணவியின் சகோதரியையும் குத்தி உள்ளார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அலர் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதற்குள் தனுஷ் அங்கிருந்து தப்பி உள்ளார். மேலும் காயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நெய்வேலி அருகே பரபரப்பு காதல் விவகாரத்தில் அக்கா, தங்கைக்கு கத்தி குத்து appeared first on Dinakaran.
