* ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
திருவண்ணாமலை, ஜூலை 19: மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பில் ஐடெக் ஆய்வக வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் வரவேற்றார். கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியதாவது: நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன், இடைநிற்றல் தவிர்த்தல், தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு உள்ளிட்ட துறை சார்ந்த பணிகள் தொடர்பாக சமீபத்தில் கல்வி அலுவலர்களுடன் ஆய்வுகளை செய்தோம்.
அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன். அதன்படி, 13வது மாவட்டமாக இந்த ஆய்வு கூட்டம் இங்கு நடக்கிறது. மாநில அளவிலான அடைத்திறன் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 9வது இடத்தில் இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்கு, பொதுப்பணித்துறை அமைச்சரும், இந்த மாவட்ட கலெக்டரும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட ஆரம்ப கல்வி முக்கியம். குறிப்பாக, 8ம் வகுப்பு வரை நன்றாக மாணவர்களை தயார் படுத்த வேண்டும். இந்த ஆண்டு 923 மாணவர்கள் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அதற்கு அடிப்படை காரணம், தொடக்க கல்விதான். கற்றல் அடைவு திறனில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 931 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு கொண்டு வரப்பட்டுள்ளது. மணர்கேனி ஆப் மூலம் எளிய முறையில் சொல்லித் தருகிறோம். மெல்ல கற்கும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, சாதாரண நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஹைடெக் லேப் வசதியை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமின்றி, நடுநிலைப் பள்ளிகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போர்ட் வசதி அனைத்து நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கும் கொண்டு வரப்படுகிறது. பள்ளி சூழலில் தொழில்நுட்ப வசதியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல ரூ.65 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து, 2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறையில் ஏற்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். ரூ.56 கோடி மதிப்பில் 880 பள்ளிகளில் ஆய்வக வசதிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அதேபோல், ரூ.160 கோடி மதிப்பில் 2000 பள்ளிகளில் புதிய ஐடெக் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படுகிறது. மாணவர்களுடைய கற்றல் மற்றும் அடைப்பு திறன்களை கணினி வழியாக அப்டேட் செய்கிறோம்.
வரும் 24ம் தேதி 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்க இருக்கிறார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என சொல்ல இருக்கிறோம். காலிப் பணியிடம் இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில்மகேஷ் ெபாய்யாமொழி முன்னிலையில் தமிழ்நாடு வாழ்க என தலைமை ஆசிரியர்கள் அனைவரும் முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்வேல்முருகன், ஜோதிலட்சுமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் சுகப்பிரியா, வீரமணி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடைவுத்திறன் தேர்வில் பின்தங்கிய நிலையில் உள்ள திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை, தண்டராம்பட்டு, வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
The post 2000 பள்ளிகளில் ரூ.160 கோடியில் ஐடெக் ஆய்வக வசதி; திருவண்ணாமலையில் மாநில அளவிலான அடைத்திறன் ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.
