- அண்ணாமலையார்
- கோவில்
- அமைச்சர்
- அறக்கட்டளைகள்
- மற்றும் நன்கொடைகள்
- சேகர்பாபு
- திருவண்ணாமலை
- அண்ணாமலை கோவில்
- தின மலர்
* பிரேக் தரிசனம் அறிமுகம்; தரிசன கட்டணம் உயர்வு
* அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவுக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள், தரிசன வரிசையை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் தர்ப்பகராஜ், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் தர், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம்பிரதீபன், கோயில் இணை ஆணையர் பரணிதரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மூத்தோர் தடகள சங்க துணைத்தலைவர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பக்தர்களுக்கான தரிசன வரிசையை முறைப்படுத்த வேண்டும், தரிசன வரிசையில் கூடுதலான வசதிகள் செய்ய வேண்டும், கோயில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
அண்ணாமலையார் கோயிலுக்கு சமீபகாலமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பிரேக் தரிசனம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தரிசன நேரத்தையும் நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். கூடும் கூட்டத்துக்கு ஏற்றபடி தரிசனம் நேரம் அதிகரிக்கப்படும்.
தற்போது தரிசன கட்டணம் ரூ.50 என்பதை ரூ.100ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். திருச்செந்தூர்போல தரிசன வரிசையை இங்கேயும் ஏற்படுத்த உள்ளோம். கட்டண தரிசன வரிசையில் காத்திருப்போருக்கு கழிப்பிடம், குடிநீர், அமரும் வசதி, கோயில் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி செய்யப்படும். ரூ.100 கட்டணத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் வசதி செய்யப்படும்.
கோயிலுக்கு வெளியே விளக்கு ஏற்ற 2 இடம் ஒதுக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும். பொது தரிசன வரிசையின் நீளம் அதிகரிக்கப்படும். திருக்கோயில் அபிஷேகம் காலத்தில் ஏற்படும் காலதாமதம் தொடர்பாக, அனைத்து இடங்களிலும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படும். கோயிலை சுற்றிலும் எல்இடி திரைகள் அமைத்து, அபிஷேகம் மற்றும் விஷேசங்கள் ஒளிபரப்பப்படும். வெளி மாநில, வெளி நாட்டினர் அதிகம் வருகின்றனர். எனவே, அவர்களை ஒருங்கிணைக்க பிஆர்ஓவை நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்குவதற்காக அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே, பக்தர்கள் தங்குவதற்கான கூடுதல் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேவையான அளவில் கூடுதல் வசதிகளை செய்து தர திட்டமிடப்பட்டு, ரூ.200 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவுக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கும்.
அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு பதவிக்காலம் முடிந்துவிட்டது. அறங்காவலர் நியமனம் தொடர்பாக இருநபர் நீதிபதி குழு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. நிறைய சட்ட திட்டங்களை வழங்கியிருக்கிறது. கடந்த முறை அறங்காவலர் குழு நியமனத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. எனவே, வரும் அனைத்து மனுக்களையும் பரிசலித்து நீதிமன்ற வழிகாட்டுதல் படி அறங்காவலர் குழு நியமிக்கப்படும். அறங்காவலர் நியமனம் தாமதப்படுதால் நிர்வாகப் பணிகள் பாதிக்காது.
கோயிலுக்குள் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இத்திருக்கோயில் பரந்து விரிந்துள்ளது. வெளி மாநில, வெளி நாட்டு பக்தர்கள் அதிகம் வருகின்றனர். எனவே, செல்போன் பயன்பாட்டில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து விரைவில் முடிவு செய்யப்படும். ஆலய தூய்மை, பிரகார தூய்மையை அரசு பாதுகாக்கும். வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், அந்த மொழிகளில் அறிவிப்புகள் எழுதப்படுகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அண்ணாமலையார் கோயிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவு appeared first on Dinakaran.
