ஒன்றிய அரசின் புதிய செயலியால் 100 நாள் வேலை திட்டத்தில் குளறுபடி: ஒன்றிய அரசு மீது காங். சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘2022ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் வருகை மற்றும் பணிகளை டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பதற்காக தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு செயலியை அறிமுகம் செய்தது. அதில் இருக்கும் செயல்பாட்டு சிக்கல்கள், திட்டத்தின் உண்மை தன்மையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து எடுத்துக்கூறி வருகின்றது.

ஜூலை 8ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஒன்றிய செயலியில் உள்ள பல்வேறு சிக்கல்களையும் ஒப்புக்கொண்டுள்ளது. வேலை உறுதி திட்டத்தில் பணியிடங்களில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றுவது, இணைப்பு சிக்கல்கள் காரணமாக புகைப்படங்களை பதிவேற்ற முடியாத உண்மையான தொழிலாளர்களை விலக்கிவிடும் என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தது. இந்த செயலியில் போலி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை புகைப்படம் எடுக்கச்செல்லலாம்.

ஒரு நிமிடம் கூட வேலை செய்யாமல் ஊதியம் பெறலாம். போலி மற்றும் சீரற்ற புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தேசிய மொபைல் கண்காணிப்பு செயலியின் பயனற்ற தன்மையை நிரூபிக்கிறது.பிரதமர் மோடி அரசானது முதலில் அறிவிப்பதை தான் குறிக்கோளாக கொண்டுள்ளது, பின்னர் தான் அது குறித்து சிந்திக்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் புதிய செயலியால் 100 நாள் வேலை திட்டத்தில் குளறுபடி: ஒன்றிய அரசு மீது காங். சாடல் appeared first on Dinakaran.

Related Stories: