சென்னை: கோயிலுக்கு செல்வதை சாதி அடிப்படையில் எவரேனும் தடுத்தால் அவர்மீது வழக்கு தொடர வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் அய்யனார் கோயிலில் பட்டியலினத்தவர் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்; அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டனர்.
கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின் இருந்து தான் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆகவே ஜூலை 16ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர் திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் ஜாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. பல தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின் ஆலைய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆலைய நுழைவு சட்டம் இயற்றப்பட்டதை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று கோரிய நீதிபதி; புதுக்குடி அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கோவிலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post ஜாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.
