புதுடெல்லி: தமிழ்நாடு கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றிய போது சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரை கைது செய்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவள்ளூர் டி.எஸ்.பியாக பணிபுரிந்த காதர் பாட்ஷா மற்றும் கோயம்பேடு சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் மீது பொன்.மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யவில்லை என்றும், அதனால் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கின் மீது மேல் விசாரணை நடத்தவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் டி.எஸ்.பி காதர் பாட்ஷா தாக்கல் செய்திருந்த மேமுறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய எந்தவித தடையும் விதிக்க முடியாது என தெரிவித்து, வழக்கை தகுதியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தொடர்ந்திருந்த வழக்கை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, “சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விவகாரத்தில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தொடர்ந்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
அதேநேரத்தில் பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும் சிலை கடத்தல் விவகாரம், சிபிஐ விசாரணை உள்ளிட்டவை தொடர்பாக பத்திரிகை, ஊடகங்கள், சமூக வலைதளங்கள், சமூக ஊடகங்கள் என எதற்கும் பேட்டி அளிக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தொடர்பான விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் ஜாமீனுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரிவாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.
