தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உமா மகேஸ்வரி பதவியை இழந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் மன்றத் தலைவி உமா மகேஸ்வரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்ய முன்வரவில்லை என்றும், தெருவிளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எதுவும் செய்து தரவில்லை என்று சொல்லி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில்லை என்ற குற்றம்சாட்டும் எழுந்தது.
அவர்களின் முறையீட்டுக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்ததால் உமா மகேஸ்வரிக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதனால் கடந்த கூட்டத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு கடந்த ஜூலை 2ம் தேதி நடைபெற்ற நிலையில், 30 கவுன்சிலர்களில் 28 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி பதவி பறிபோனது.
இதனைத்தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக உமா மகேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியா நிலையில், வாக்குசீட்டு அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றி சமர்ப்பிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார். இன்று கவுன்சிலர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.
The post நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்: சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் பதவியை இழந்தார் உமா மகேஸ்வரி appeared first on Dinakaran.
