முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை தொடர்ந்து விரைவில் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை தொடர்ந்து பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பூங்கா ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை மொத்தம் 19.34 கி.மீ. தூரம் கொண்ட பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. 1997ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள பறக்கும் ரயில் திட்டமானது தெற்கு சென்னையை இணைக்கும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த சேவையை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக, எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி, ரயில் சேவையை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, வேளச்சேரி பரங்கிமலையை சென்னையின் மையப் பகுதியிலிருந்து தெற்கே இணைக்கும் முழு திட்டத்தையும் சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் தமிழக அரசும் ஆர்வம் காட்டியுள்ளது. இந்த சூழலில், பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். தற்போது, சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நிதிப்பற்றாக்குறை காரணமாக பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் தற்போது நேரடியாக தலையிட்டு திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது. ரயில்வே வாரியத்திலுள்ள அனைத்து பிரிவுகளும் ஏற்கனவே திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது வாரியத் தலைவரின் ஒப்புதல் மட்டுமே நிலுவையில் உள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், திட்டம் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து இறுதி முடிவும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வந்தாலும், இதுவரை அது செயல்பாட்டில் வரவில்லை.

உரிய அனுமதி கிடைத்தவுடன் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) மூலம் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த இணைப்பின் மூலம், பயணிகள் பறக்கும் ரயில்களில் இருந்து மெட்ரோ நிலையங்கள் வழியாக எளிதாக பயணிக்க முடியும். மேலும், பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், கூடுதல் வசதிகள் மற்றும் மேம்பட்ட ரயில் சேவை பயணிகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நீண்ட நாட்களாக பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலையங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, செயல்திறன் அனைத்திலும் தரம் உயரும். இதனால் பயணிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியும். இந்த சேவையில் 80% பயணிகள் தினசரி பணிக்காக செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் என்பதால் டிக்கெட் விலை மலிவாகவே இருக்க வேண்டும்’’, என்றனர்.

மெட்ரோ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் விவரங்கள்

  • ஒப்புதல் கிடைத்தவுடன் பறக்கும் ரயில் சேவை முழுமையாக கையகப்படுத்தப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
  •  நிலையங்களில் தரம் உயர்ந்த பராமரிப்பு.
  • இயங்கும் ரயில்கள் மற்றும் சிஸ்டம்களை ஒருங்கிணைத்தல்.
  •  சிக்கனமான நிர்வாக திட்டம்.
  • பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகள்.
  • திட்ட அறிக்கை தயாரித்த பின் ஒரு சில மாதங்களில் அமல்படுத்த முடிவு.

கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை

(மொத்தம் 17 ரயில் நிலையங்கள் 19.34 கி.மீ)
சென்னை கடற்கரை – சேப்பாக்கம் 5 கிலோ மீட்டர் தூரம் சேவை துவங்கிய நாள்- நவ.16 1995
சேப்பாக்கம் – திருமயிலை 3.66 கிலோ மீட்டர் தூரம் சேவை துவங்கிய நாள்- அக்.19,1997
திருமயிலை – திருவான்மியூர் 5.99 கிலோ மீட்டர் தூரம் சேவை துவக்கிய நாள்- ஜன.26, 2004
திருவான்மியூர் – வேளச்சேரி 4.69 கிலோ மீட்டர் தூரம் துவக்கிய நாள்- நவ.19, 2007

The post முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை தொடர்ந்து விரைவில் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: