புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் என்டிபிசி ரூ.20,000 கோடி முதலீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.20,000 கோடி வரை முதலீடு செய்ய தேசிய அனல்மின் கழகத்துக்கு (என்டிபிசி) ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,‘‘2032 ம் ஆண்டுக்குள் 60 கிகாவாட் திறனை அடையவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிப்பதற்காகவும், அரசு நடத்தும் என்டிபிசி ரூ. 20,000 கோடி வரை முதலீடு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாக கொண்ட பிரதம மந்திரி தன் தன்யா கிரிஷி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல், நீர்பாசனத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி ஆண்டுக்கு ரூ.24000 கோடி மதிப்பீடு அடிப்படையில் 6 ஆண்டுகளுக்கு இது செயல்படுத்தப்படும். இதில் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். என்எல்சி ரூ.7000 கோடி முதலீடு பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் என்எல்சி நிறுவனம் அதன் துணை நிறுவனமான என்ஐஆர்எல் லிமிடெட்டில் ரூ.7000 கோடி முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, என்எல்சி இந்தியா நிறுவனம் 2030 ம் ஆண்டுக்குள் 10.11 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைச் சேர்க்க உதவும். இது 2047 ஆம் ஆண்டுக்குள் 32 கிகாவாட் ஆக உயர்த்தப்படும்.

* சுபான்ஷூவுக்கு அமைச்சரவை பாராட்டு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வரலாற்று சிறப்பு மிக்க 18 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை பாராட்டி ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுக்லாவின் விண்வெளிப் பயணம் முழு நாட்டிற்கும் பெருமை, பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம் என்றும், இந்தியாவின் எல்லையற்ற அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

18 நாள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்ததை தொடர்ந்து சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதை கொண்டாடுவதில் அமைச்சரவை நாட்டுடன் இணைகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.

The post புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் என்டிபிசி ரூ.20,000 கோடி முதலீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: