கோடைக்காலத்தில் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக ஒசோன் மாசு

புதுடெல்லி: கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த கோடை காலத்தில் அதிக அளவு ஒசோன் மாசு ஏற்பட்டதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏற்பட்ட ஓசோன் மாசு குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பகுப்பாய்வு செய்துள்ளது. இதில் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு அதிக ஓசோன் மாசு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் பிற பொருட்களை எரிப்பதன் மூலமாக வெளியேறும் நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் சூரிய ஒளியில் வினைபுரிந்து தரை மட்டத்தில் ஓசோன் உருவாக வழிவகுக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் 1முதல் மே 31ம் தேதி வரை மும்பை மற்றும் அதன் கண்காணிப்பு நிலையங்களில் 92 நாட்களில் 32 நாட்கள் ஓசோன் அதிகப்படியான அளவை பதிவு செய்தது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 42சதவீதம் குறைவாகும். கொல்கத்தாவில் 92 நாட்களில் 22 நாட்கள் ஓசோன் அளவு பாதுகாப்பு வரம்பை தாண்டி காணப்பட்டது. பெங்களூரில் 45 நாட்களில் ஓசோன் அளவு அதிகமாக இருந்தது. ஐதராபாத்தில் 20நாட்களில் ஓசோன் மாசு அளவு அதிகமாக இருந்தது.

சென்னையில் இந்த கோடையில் 14 நாட்களில் ஓசோன் அளவு அதிகமாக இருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் நிர்வாக இயக்குனர் அனுமிதா ராய் சவுத்ரி கூறுகையில், ‘‘தரைமட்ட ஓசோன் உருவாவதை கட்டுப்படுத்தாவிட்டால் இது ஒரு கடுயைமான பொது சுகாதார நெருக்கடியாக மாறும். ஏனெனில் ஓசோன் மிகவும் வினைத்திறன் கொண்ட வாயு மற்றும் குறுகிய நேரத்தில் தீங்கு விளைவிக்கக் கூடியது” என்றார்.

The post கோடைக்காலத்தில் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக ஒசோன் மாசு appeared first on Dinakaran.

Related Stories: