ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் ஜெயராம் முர்மு (20) என்பவர், தனது மனைவி சோனியா மற்ற ஆண்களுடன் பேசுவதாகச் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த சந்தேகத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தனது மனைவியையே கொடூரமாகக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த 13ம் தேதி இரவு, தனது மனைவியையும், அவரது இரண்டு நண்பர்களையும் குறிப்பிட்ட இடத்திற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்ட பிறகு, சோனியாவின் நண்பர்கள் இருவரும் ‘ஹடியா’ என்ற மதுவை அருந்திவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஜெயராம், மனைவியை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று, அன்பாகக் கட்டிப்பிடிப்பது போல் நடித்து, கூர்மையான பிளேடால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.
பின்னர், மனைவியின் உடலை பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் கட்டி, தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று, ஊருக்கு வெளியே உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தலைமறைவானார். இந்தக் கொடூர சம்பவம், சாக்கடையில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டபோது வெளிச்சத்திற்கு வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, அடுத்த சில மணி நேரங்களிலேயே வழக்கின் மர்மம் விலகியது. ஜெயராமைப் பிடித்து விசாரித்தபோது, அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கொடூரக் கணவனைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கட்டிப்பிடிப்பது போல் நடித்து மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: சாக்கடை கால்வாயில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.
