அரசு வேலை.. வேலை திறன் பாதிக்கவில்லை எனில் மாற்றுத்திறனாளிக்கு தடை இருக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து!!

மதுரை: ஆறு விரல் இருப்பதால் தன்னை மத்திய பாதுகாப்பு படை பணிக்கு நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மத்திய பணியாளர் தேர்வாணையம் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை உள்ளிட்ட மத்திய போலீஸ் படை காவலர்கள் தேர்வு தொடர்பாக 2023ல் அறிவிப்பு வெளியிட்டது. நான் காவலர் பணிக்கு விண்ணப்பித்தேன். அனைத்து தேர்வுகளிலும் வெற்றிப்பெற்ற நிலையில் 7.10.2024ல் மருத்துவ தேர்வில் பங்கேற்றேன்.

மருத்துவ தேர்வுக்கு பிறகு, எனது இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி நான் காவலர் பணிக்கு நிராகரிக்கப்பட்டேன். என்னை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு காவலர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுவை நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அதில், அரசுப் பணி பாதுகாப்பான பணியாக அனைவரும் கருதுகின்றனர். முன்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பின்னர் நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அரசுப்பணி பாதுகாப்பான பணியாகவே கருதப்படுகிறது. மாற்றுத்திறன் என்பது கடவுளின் செயல். அதை மனித தவறாக கருத முடியாது. ஒருவரின் மாற்றுத்திறன் அவர் அரசுப் பணி பெறுவதற்கு தடையாக இருக்க முடியாது.

அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் சாதாரணமானவர்களை போல் செயல்பட முடிந்தவர்களை மருத்துவரீதியாக தகுதியற்றவர் என அறிவித்து பணி வழங்க மறுக்கக்கூடாது. இதுபோன்ற விவகாரங்களை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். ஒருவரின் மாற்றுத்திறன் வேலை திறனை பாதிப்பதாக இருந்தால் மட்டுமே வேலை மறுக்க முடியும். வேலை திறனை பாதிக்கவில்லை எனில் மாற்றுத்திறனாளிக்கு வேலை மறுக்க தேவையில்லை. எனவே மனுதாரரின் மருத்துவ அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மத்திய காவல் பணிக்காக மனுதாரரின் மருத்துவ அறிக்கையை மறுசீராய்வு அல்லது மீண்டும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

The post அரசு வேலை.. வேலை திறன் பாதிக்கவில்லை எனில் மாற்றுத்திறனாளிக்கு தடை இருக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து!! appeared first on Dinakaran.

Related Stories: