×

பொற்பனைக்கோட்டை 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு தமிழ்நாடு தொல்லியல்துறை தகவல்

புதுக்கோட்டை, ஜூலை 16: புதுக்கோட்டை அடுத்த பொற்பணைகோட்டையில் தமிழகத் தொல்லியத் துறை சார்பில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அடுத்த வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கின.

மொத்தம் 17 குழிகள் அமைத்து, நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதில், மாதிரிகள் சேகரிப்பு முடிந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு குழிகள் மூடப்பட்டன.

இங்கு நடைபெற்ற அகழாய்வுப் பணிகள் குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையின் உள்ளே 3.11 ஏக்கர் மக்கள் வாழ்விடப் பகுதி உள்ளது. இங்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 2021ல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, தமிழகத் தொல்லியல் கழகம் சார்பில் முதல் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த 2023ல் நடைபெற்றது. 22 குழிகள் அமைக்கப்பட்டு, 155 நாட்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில், எலும்பு முனைக்கருவி, தங்கத் தோடு, சூதுபவள மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட 533 தொல் பொருட்கள் கிடைத்தன. செங்கல் கட்டுமானங்களும் வாய்க்கால்களைப் போன்ற நீர்வழித் தடங்களும் வெளிப்பட்டன. இந்த நிலையில், 2ஆம் கட்ட அகழாய்வு கடந்த 2024 மே மாதம் தொடங்கப்பட்டது. மொத்தம் 17 குழிகள் அமைக்கப்பட்டன. இதுவரை இரும்பு ஆணிகள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் செம்பினால் ஆன ஆணிகள், மை தீட்டும் குச்சி, தங்க அணிகலன்கள், மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளங்களாக அகேட் கல்லின் மூலப் பொருட்கள், மணிகளைத் தேய்த்து உருவாக்கும் தேய்ப்புக் கல் போன்றவையும் கிடைத்தன.

எரிந்த நிலையிலான நெல்மணிகள், தாவரத்தின் வேர் போன்ற பகுதி, தமிழ்ப் பிராமி எழுத்துகள் மற்றும் கீறல் குறிகளைக் கொண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றன. 203 நாட்கள் பணி நடைபெற்ற அகழாய்வில் மொத்தம் 1982 தொல் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாதிரிகள் சேகரிப்பு முடிந்து, குழிகளை மூடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்த ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளன.

The post பொற்பனைக்கோட்டை 2ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு தமிழ்நாடு தொல்லியல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Porpanaikottai ,Tamil Nadu Archaeological Department ,Pudukkottai ,Veppangudi panchayat ,Pudukkottai… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...