×

புதுவையில் மதுக்கடை உரிமத்துக்கு போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி

 

புதுச்சேரி, ஜூலை 16: பாகூர் சோரியாங்குப்பம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன் (54). இவருக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை நடத்துவதற்காக, கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ் காந்தி நகர் தமிழ் மகள் வீதியை சேர்ந்த தனியார் மதுக்கடை உரிமையாளரான பிரபுதாஸ் மனைவி பிரீத்தா அணுகி, வாடகைக்கு இடம் கேட்டுள்ளார். அதற்கு தினகரனும் சம்மதித்து, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் வாடகை ஒப்பந்த பத்திரம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

அன்று முதல் தினகரனுக்கு சொந்தமான இடத்தில் பிரீத்தா தொடர்ந்து 5 ஆண்டுகள் மதுக்கடை நடத்தி வந்துள்ளார். அதன்பிறகு, வாடகை ஒப்பந்த பத்திரம் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பார் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாடகை பத்திரத்தை புதுப்பித்து, அதனை கலால்துறையில் கொடுத்து பார் நடத்தும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற தகவல் தினகரனுக்கு கிடைத்துள்ளது.

மேலும், ஒரு பார் உரிமையாளர் வாடகை பத்திரம் போலியாக தயாரித்து கலால்துறையில் கொடுத்து உரிமத்தை புதுப்பித்து வந்ததாகவும், இதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் தினகரனுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனே கலால்துறையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தன்னுடைய இடத்தை வாடகைக்கு கொடுத்த மதுக்கடை உரிமையாளரான பிரீத்தா கலால்துறையில் சமர்ப்பித்த வாடகை பத்திர நகல்களை கேட்டு பெற்றுள்ளார்.

அதில், 2014ல் போடப்பட்ட ஒப்பந்தபத்திரத்தை தவிர, மற்ற அனைத்து வாடகை ஒப்பந்த பத்திரங்களும் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரது கையெழுத்தை மதுக்கடை உரிமையாளரே போட்டுள்ளதும் தெரியவந்தது. இதன் மூலம் பிரீத்தா போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்து தினகரனையும், கலால்துறையையும் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து தினகரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோரிமேடு போலீசார் போலி வாடகை பத்திரம் தயாரித்த பிரீத்தா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் மதுக்கடை உரிமத்துக்கு போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,Soriyanguppam Nadutheru ,Bagur ,Prabhudas ,Tamil Makkal Veediya ,Rajiv Gandhi Nagar… ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்