×

முன்கூட்டியே தேர்தல் பேச்சு அமித்ஷாவின் அழைப்பை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி: பாஜவினர் அதிர்ச்சி

 

புதுச்சேரி, ஜூலை 16: பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்த நிலையில், அதனை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே தேர்வு செய்யப்பட்ட அரசு பல்வேறு திட்டங்களுக்கான கோப்பினை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது அவசியம். இதனால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது. துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்ட பிறகு சுமூக உறவு நீடித்து வந்தது. இந்நிலையில் திடீரென முதல்வர்- கவர்னர் இடையே சிறு, சிறு விவகாரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு மோதலாக வெடித்துள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் நியமன விவகாரத்தில் முதல்வர் பரிந்துரையை ஏற்காமல் நேரடியாக அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேலை இயக்குநராக நியமித்தார். இதற்கு முதல்வர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.  பரிந்துரையை ஏற்காமல் கவர்னர் மறுக்கட்டும், ஆனால் தன்னிச்சையாக எப்படி நியமனம் செய்யலாம். இது தேர்வு செய்யப்பட்ட அரசை அவமானப்படுத்துவது போல் உள்ளது என என்.ஆர் காங்கிரசார் கொதித்தனர்.

மேலும் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை அழைத்து, ஒரு இயக்குநரை கூட என்னால் நியமிக்க முடியாது என்றால், எதற்காக இந்த பதவியில் இருக்க வேண்டும். ராஜினாமா செய்துவிடுவேன் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். மேலும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சட்டமன்றம் வருவதையும் தவிர்த்து வந்தார்.  இதையடுத்து பாஜ மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கோரிமேட்டில் உள்ள முதல்வர் வீட்டில் அவரை சந்தித்தார். அப்போது சில நிபந்தனைகளை தெரிவித்த ரங்கசாமி, 3 மாத காலத்துக்குள் முடித்து தர வேண்டும்.

இல்லாவிட்டால், என்னை விட்டு, விடுங்கள் நான் என் வழியை பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரானா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார். இதனையேற்று சட்டசபைக்கு வந்து ரங்கசாமி மக்கள் பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நேரம் ஒதுக்கியுள்ளார்.

அதேபோல் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், பாஜ தலைவர் ராமலிங்கம் ஆகியோரையும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் காமராஜர் பிறந்தநாள் என்பதால், பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் இன்று (நேற்று) வர இயலாது வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி ரங்கசாமி தெரிவித்துவிட்டார்.

இதனால் பாஜவினர் டெல்லி செல்வது ரத்தானது. பாஜ மேலிடப்பொறுப்பாளர் புதுச்சேரிக்கு வந்து, முதல்வரிடம் பேசி, வசதியான தேதியை இறுதி செய்வார் என பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர் ரங்கசாமி அமித்ஷாவை இன்னும் சில நாட்களில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியில் தொடர்வதா? இல்லையா என்பதை இப்போதைக்கு முடிவெடுக்க முடியாத சூழலில் ரங்கசாமி உள்ளார்.

எனவே முன்கூட்டியே அமித்ஷாவை சந்தித்துவிட்டால், தேவையில்லாமல் தேர்தல் கூட்டணிக்கு கமிட்மெண்ட் ஆகிவிடும்.  பாஜ தலைமையிடம் சரண்டர் ஆவதோடு, சீட்டு பேரம், நிலுவையில் உள்ள சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதில் மென்மையான போக்கிற்கு செல்ல வேண்டிய நிலைமை ரங்கசாமிக்கு ஏற்படும் என்பதால் திட்டமிட்டு அமித்ஷாவுடனான சந்திப்பை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் நெருக்கத்தில் அமித்ஷாவை பார்த்துக்கொள்ளலாம், நான்கு ஆண்டுகளில் செய்யாதவர்கள், இந்த குறுகிய காலத்தில் எதையாவது செய்துவிடப்போகிறார்களா? என என்.ஆர் காங்கிரசார் கூறுகின்றனர். முதல்வரின் புறக்கணிப்பு முடிவு பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post முன்கூட்டியே தேர்தல் பேச்சு அமித்ஷாவின் அழைப்பை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி: பாஜவினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Amit Shah ,BJP ,Puducherry ,Union Home Minister ,Tejashwi party ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்