×

3வது டெஸ்டில் வெ.இ. படுதோல்வி; ஆஸி. சாதனை வெற்றி

கிங்ஸ்டன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் இரு டெஸ்ட்களில் ஆஸி வென்ற நிலையில், கடந்த 12ம் தேதி கிங்ஸ்டன் நகரில் 3வது டெஸ்ட் துவங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 225 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 143 ரன்னுக்கு சுருண்டது. பின், 2வது இன்னிங்சை ஆடிய ஆஸி, 3ம் நாளில் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

அதன் பின், 2வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆஸி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வருவதும் போவதுமாக இருந்தனர். 14.3 ஓவர்கள், அதாவது 87 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 27 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். ஜான் கேம்ப்பெல், கெவ்லான் ஆண்டர்சன், பிராண்டன் கிங், கேப்டன் ரோஸ்டன் சேஸ், ஷமர் ஜோசப், ஜோமெல் வாரிகான், ஜெய்டன் ஸீல்ஸ் ஆகிய 7 வீரர்கள் பரிதாபமாக பூஜ்யத்தில் வீழ்ந்தனர்.

அதிகபட்சமாக, ஜஸ்டின் கிரீவ்ஸ் 11 ரன் எடுத்தார். ஆஸி தரப்பில், மிட்செல் ஸ்டார்க் 7.3 ஓவர் வீசி 9 ரன் மட்டுமே தந்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். 15வது ஓவரை வீசிய ஆஸியின் ஸ்காட் போலண்ட், முதல் 3 பந்துகளில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஹாட்ரிக் சாதனையை அரங்கேற்றினார். அதனால், ஆஸ்திரேலியா அணி 176 ரன் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இமாலய சாதனையை படைத்தது. மேலும், 3-0 என்ற கணக்கில் ஆஸி தொடரையும் வென்று அசத்தியது.

பரிதாப பட்டியலில் 2ம் இடம் பிடித்த வெ.இ.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு இன்னிங்சில் 2வது மிகக் குறைந்த ரன்களில் வீழ்ந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் உருவெடுத்துள்ளது. இதற்கு முன், கடந்த 1955ம் ஆண்டு, ஆக்லாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய நியுசிலாந்து 26 ரன்களுக்குள் ஆட்டத்தை பறிகொடுத்து, இந்த பரிதாப சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

The post 3வது டெஸ்டில் வெ.இ. படுதோல்வி; ஆஸி. சாதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : West Indies ,Kingston ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...